உலகையே நொடிக்கு நொடிபேச வைக்கும் கரோனா வைரஸ் ஒவ்வொரு நாடுகளின் பொருளாதாரத்தையும் தாக்கி கடுமையான படுபாதாளத்தில் தள்ளி வருகிறது. இது ஒரு நகரின் ஒரு நாள் இழப்பு விபரம்தான்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், மால்கள், ஜவுளி சந்தை, கால்நடை சந்தைகள், உள்ளிட்டவை மூடப்பட்டு விட்டன. இந்த நடவடிக்கைகள் பொருளாதார ரீதியாக மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஈரோட்டின் பிரதான தொழிலாக இருந்து வரும் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள ஜவுளி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த 500 தினசரி கடைகள் மற்றும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாரசந்தை கடைகள் என 2500க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை சரிபாதி சதவீதமாக குறைந்துள்ளது. ஜவுளி மட்டுமல்ல எண்ணெய், மசாலா, முட்டை உள்ளிட்டவைகளை அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு அனுப்புவதில் தடை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ஜவுளி ஏற்றுமதியும் தடையானதால் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என வணிகர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இன்று முதல் பெரிய ஜவுளி நிறுவனங்கள், பெரிய நகைக் கடைகளும் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதனால் வியாபார பகுதியான ஆர்.கே.வி ரோடு ,மேட்டூர் ரோடு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மொத்தம் பெரிய ஜவுளி கடைகள் நகைக் கடைகள் என 150 கடைகள் 31-ஆம் தேதி வரை மூடப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளர் சிவனேசன் கூறும்போது, "கரோனா பாதிப்பு காரணமாக ஜவுளி கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஒருபுறம் வரவேற்றாலும் மறுபுறம் தொழில் முனைவோர் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துபாய்,ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்வது முழுவதுமாக தடைபட்டுள்ளது. உள்ளூர் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஈரோட்டிலிருந்து அரேபிய நாடுகளுக்கு மசாலா பொருட்கள் அனுப்புவது தடைபட்டுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட ஜவுளி ஆர்டர்கள் உற்பத்தி செய்தும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக தற்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு ரூபாய் ஐம்பது கோடி அளவுக்கு உற்பத்தி மற்றும் வணிக இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் வணிகர்கள், தொழிலாளர்கள், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றும் லட்சக்கணக்கான ஏழை தொழிலாளர் குடும்பங்கள் அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் தவிக்கப்போகின்றன" என அவர் கூறினார்.
கரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கை எப்படி முக்கியமோ அது போல ஏழை தொழிலாளர்களுக்கு சாமானிய மக்களுக்கு வறுமை என்ற துன்ப வைரஸ் நோயை ஆளும் அரசுகள் கொடுக்க கூடாது. சாதாரண மக்களின் அன்றாட தேவையை இந்த அரசுகள் உணர வேண்டும் என்பதே ஈரோடு மக்களின் கோரிக்கை.