கரோனா வைரஸ் தொடங்கிய போதே ஈரோடு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த நிர்வாகத்தின் கூட்டு உழைப்பால் வைரஸ் பாதிப்பாளர்கள் எண்னிக்கை 100க்குள் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்ந்து 40 நாட்கள் புதிய தொற்றாளர்கள் இல்லாமல் முழுவதும் கரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
ஆனால் இரண்டாம் கட்ட அலையாக ஒவ்வொரு நாளும் 10 பேர், 20 பேர், அடுத்து 50 பேர் பிறகு 80 பேர் என அதிகரித்துக் கொண்டே வந்து இப்போது ஒவ்வொரு நாளும் நூறுக்கு மேல்தான் எண்ணிக்கை வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 103 பேருக்கு கரோனா உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 445 ஆக உயர்ந்தது. மேலும் நான்கு பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் கரோனா தாக்கம் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஈரோடு மாநகர பகுதிகள் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் கரோனா தொற்று வீதி விதியாக பரவ தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் வரையில் ஆயிரத்து 349 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையோடு மொத்தம் ஆயிரத்து 445 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று ஒரே நாளில் 137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் இறந்து விட்டார். இன்று 9 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள 1,182 பேரில் 904 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். 653 பேர் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் எண்ணிக்கை கூடி வருவது ஈரோடு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.