
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில செயலாளர் செல்லச்சாமி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில் செல்லச்சாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும் விவசாயிகளுக்கும், இந்திய புரட்சிகர மார்க்கிஸ்ட் கட்சியின் சார்பில் முழு நிவாரணம் அளிக்கப்படும் என்று தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் என்பது யானை பசிக்கு சோளப்பொறி வழங்குவது போல் உள்ளதால் அப்பகுதி மக்கள் மீண்டெழுந்து வருவது கடினமானது. அதனால் தமிழக அரசு முழுமையாக பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழகத்தை ஆளும் அதிமுக அரசானது எல்லா நிலையிலும் தோல்வியடைந்து வருகிறது. குட்கா முதல் முட்டை வரை உள்ள அனைத்து துறையிலும் ஊழலில் மிதக்கும் இந்த அதிமுக அரசானது மக்கள் விரோத அரசு. இந்த அதிமுக அரசானது நீக்கப்பட்டு, மக்களால் புதிய அரசு கொண்டு வரப்பட வேண்டும்.
மத்திய அரசின் பினாமி அரசாக செயல்படும் அதிமுக அரசானது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில், சிறப்பாக செயல்பட்ட ஒரு நேர்மையான அதிகாரியையும் மாற்றவும், வழக்கை சிபிஐக்கு மாற்றவும் உத்தரவிடுகிறது. நீதிமன்றம் தலையிட்டு அந்த அதிகாரியை பதவிகாலம் நீட்டிப்பு செய்யும் அளவிற்கு இந்த தமிழக அரசின் செயல்பாட்டின் அவல நிலையை காட்டுகிறது.
கடன் தள்ளுபடி, உற்பத்தி பொருட்களின் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய அரசாங்கமானது, மீண்டும் தமிழகத்தில் செயல்படும் பினாமி அரசாக அதிமுகவை கொண்டு 13 பேர் உயிர்தியாகம் செய்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்படுகிறது.
அவ்வாறு திறந்தால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். மேலும் விருத்தாசலம் –பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலையை 162 கோடிக்கு நிதி ஒதுக்கி, எவ்வித பணியையும் முழுமையாக முடிக்காமல் இருப்பதினால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. உடனடியாக. விரைந்து அதை முடிக்க வேண்டும்.