இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. முன்னெச்சரிச்சை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஊரடங்கு பிறப்பித்து, சமூக இடைவெளியை முறையாக கடைபிடியுங்கள் என்று வலியுறுத்திய போதிலும், 30% மக்கள் அதை அலட்சியம் செய்தது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் கோயம்பேடு மார்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியதையும், இதன் காரணாமக பெரும் பின்விளைவை தமிழகம் சந்திக்கப் போகிறது என்பதையும் நக்கீரன் இணையதளம் ஏற்கனேவே எடுத்துரைத்திருந்தது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடைய 119 பேருக்கு தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேட்டில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி கடும் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோயம்பேட்டிலிருந்து அரியலூர் திரும்பிய 22 பேருக்கும், கடலூர் திரும்பிய 17 பேருக்கும், காஞ்சிபுரம் திரும்பிய 7 பேருக்கும், விழுப்புரம் திரும்பிய 20 பேருக்கும், பெரம்பலூர் திரும்பிய ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.