கரோனா பரவல் வேகமாக உள்ள நிலையில், இந்தியாவில் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வெளியே வருவதை தடுக்க பல முயற்சிகளை அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்ததுபோல், வங்கி ஏ.டி.எம்.களுக்கும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி கேட்டுக்கொண்டதன் விளைவாக, வரும் ஏப்ரல் 7ந்தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏ.டி.எம். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள், காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும், வங்கி விடுமுறை தினங்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் வங்கி மேலாளர், அனைத்து வங்கிகளுக்கும் கூறிய உத்தரவுப்படி, இனி அனைத்து பொதுத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் மாலை 4 மணி வரை மட்டுமே இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.