நாசக்கார கரோனா வைரஸ் நவீன விஞ்ஞான உலகை உருகவைத்துக் கொண்டிருக்கிறது. 200 நாடுகள், 780 கோடி மக்களின் இதயம் நெருப்பாய் பதைபதைக்கிறது. இதற்கு ஒரே தீர்வாக மருத்துவ சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும் மனித குலத்தின் சமூக இடைவெளியும், தனிமைப்படுத்தப்பட்வதும்தான் இதற்கு தீர்வு என சர்வதேச உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
அதன் அடிப்படையில் முதலில் ஒவ்வொரு நாடுகளும் தனது எல்லையை மூடியது. அது போலவே இந்தியாவும் செய்தது. பிறகு இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும் தங்களது எல்லையை பூட்டியது. அடுத்து ஒவ்வொரு மாவட்டம், ஒவ்வொரு நகரம் என எல்லைகள் மூடப்பட்டது. கரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவிலேயே முதலில் தனிமைப்படுத்த மாவட்டமாக அறிவிக்கப்பட்ட ஈரோட்டில் முன்பு 12 வீதிகள் அடைக்கப்பட்டது இப்போது ஒவ்வொரு வீதியும் அடைக்கப்படுகிறது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் சாந்தாங்காடு தெரு மக்கள் தங்களின் தெருவிற்குள் வேறு பகுதியைச் சேர்ந்த யாரும் உள்ளே நுழையக்கூடாது என குறுக்கு கம்பத்தை வைத்து சொந்த ஊரிலேயே அந்நியர்கள் யாரும் உள்ளே வர அனுமதியில்லை என பெயர் பலகை வைத்து விட்டார்கள். கரோனா நாடுகளை பிரித்தது, மாநிலங்களை துண்டாக்கியது, மாவட்டங்களை தனித்தனியாக முடக்கியது. இப்போது நகரங்களையும் அதில் உள்ள ஒவ்வொரு வீதிகளையும் பிரித்து மூடி வருகிறது.