விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு எதிராக தி.மு.க. அரசைக் கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
கடந்த 10 ஆண்டுகளில், அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டண உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது. ஏழைகளைப் பாதிக்கின்ற எந்தச் செயலையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியதில்லை. இன்றைக்கு ஆளும் திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படாமல், விலைவாசி உயர்வு குறித்து கவலைப்படாமல் விளையாட்டு மோகத்தில் இருக்கிறார். விளையாட்டு போட்டிகளைக் கண்டுகளிக்கிறார். அங்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
பட்டாசுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத ஜிஎஸ்டி வரியை, 18 சதவீதமாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் என்னுடைய முயற்சியால் குறைக்கப்பட்டது. தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைத்ததும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் என்னுடைய முயற்சியால் நடந்தது. பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் பாதிப்பு குறித்து டெல்லியில் போய் பேசுவதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் யாருக்கும் திராணி இல்லை. தெம்பு இல்லை. இருப்பதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விடுவோம் என்ற நினைப்பில்தான் ஆட்சி நடத்துகின்றனர். நல்லவிதமான மக்கள் திட்டங்கள் எதையும் செய்வது கிடையாது. நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நடந்தால் வரி என எதற்கெடுத்தாலும் வரி விதித்தால், என்ன நியாயம்? எப்படித்தான் சாப்பிடுவது?
கடும் விலைவாசி உயர்வைத் தட்டிக் கேட்பதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் தயாராக இல்லை. சட்ட மன்றத்திலும் கேட்பதில்லை. வெளியிலும் கேட்பதில்லை. இதையெல்லாம் பேசக்கூடிய இடத்திலுள்ள ஒரே கட்சி அதிமுகதான். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்தி, மத்திய அரசைக் கேவலப்படுத்தும் பணியைச் செய்கிறார்கள். மத்திய அரசிடம் பேசி ஏராளமான நிதிகளைப் பெற்று தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்கு தி.மு.க.வில் ஆள் இல்லை. இப்போது இருக்கின்ற நிலைமை மாறவேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வரவேண்டும்” எனப் பேசினார்.