எட்டு ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை உறவினர்கள் ஒன்று சேர்ந்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிகழ்வு உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிறுதானூரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் கடந்த எட்டு வருடமாக ரோஸ்லின் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வேலை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளனர். பெசன்ட் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து இருவரும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ரோஸ்லின் மேரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தமிழரசனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது திருமணம் பற்றி பேசினாலும் ஏதாவது காரணம் சொல்லி காலம் கடத்தி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் தன்னை காதலித்து ஏமாற்றியதாக சென்னை அடையாறு உட்பட நான்கு காவல் நிலையங்களில் ரோஸ்லின் புகார் அளித்தார்.
ரோஸ்லின் மேரி புகாரை பார்த்த சென்னை காவல்துறையினர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அவரிடம் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக விசாரணை நடத்திய போது முதலில் திருமணம் செய்துகொள்ள மறுத்த தமிழரசன் பின்னர் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்வதாகவும் இரண்டு மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். ஆனால் இதேபோல பலமுறை அவகாசம் கேட்டு தன்னை ஏமாற்றியதாக தெரிவித்த ரோஸ்லின் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அங்கு இருந்த உறவினர்கள் மத்தியிலேயே காதலன் தமிழரசனின் கை பிடித்துக் கொண்டு கெஞ்சினார்.
அதன் பிறகு தமிழரசன் கையில் மாலையை கொடுத்து ரோஸ்லின் கழுத்தில் போடச் சொல்லி சுற்றியிருந்தவர்கள் வலியுறுத்தினர். 'ஒரு நாள் அவகாசம் கொடுங்க எனக்கு' என்று தமிழரசன் வேண்டா வெறுப்பாக ரோஸ்லின் கழுத்தில் மாலையை போட்டுவிட்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். ஆனால் அங்கிருந்தவர்கள் விடாப்பிடியாக பிடித்து தாலி கட்டும்படி அறிவுறுத்தினர். இப்படி பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ரோஸ்லின் கழுத்தில் தமிழரசன் தாலி கட்டினார். ஆனால் காவல் நிலையத்திற்கு உள் சென்ற தமிழரசன் தன்னை அடித்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் காரில் காத்துக் கொண்டிருந்த தமிழரசனின் உறவினர்கள் காவலர்கள் முன்னிலையில் ரோஸ்லின் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றனர். சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.