
எளிய மக்களின் நெடுங்கனவு, ஒரு வீடு. அந்தக் கனவை நனவாக்கும் அரசாங்க நிறுவனம்தான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்.
தங்கள் கனவு நிறைவேறும் வகையில் வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கியவர்கள் பல ஆயிரம் பேர். அவர்களில் பல பேருக்கு, ஆவணங்கள் சரியாக இருந்தும் கிரையப் பத்திரம் உரிய முறையில் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறல் இருந்த நிலையில், கடந்த இரண்டாண்டுகால தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் 12ஆயிரம் பேருக்கு கிரையப் பத்திரம் கிடைத்து, உரிய பலனை அடைந்துள்ளனர். இதற்கான முயற்சிகளில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களுடன் வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன் முனைப்பாக செயல்பட்டு தீர்வு கண்டார்.
இதுபோலவே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிலம் எடுப்பது தொடர்பான சிக்கல்கள் நீடிப்பதால் வாரியமும் பாதிக்கப்பட்டுள்ளது, நில உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர், சட்ட விதிமுறைகள் உள்பட அனைத்து வகையிலும் ஆய்வு செய்யத் தகுதியான ஒரு சிறப்புக்குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் அதிகாரிகள் மற்றும் சட்ட அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு விரைவில் அமைக்கப்பட இருக்கிறது.
பயனாளிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தங்கள் குறைபாடுகளைத் தீர்த்துக் கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் 16 இடங்களில் கோரிக்கை மனுப் பெட்டி வைக்கப்பட இருக்கிறது. ஜூன் 3ந் தேதி முதல் 30ந் தேதி வரை அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தக் கோரிக்கை மனு பெட்டிகளைப் பயன்படுத்தலாம். உரிய ஆவணங்கள் அனைத்தையும் நகல் எடுத்து, மனுவுடன் இணைத்து அனுப்ப வேண்டும். ஏற்கனவே மனு செய்திருந்தாலும், மீண்டும் இந்தக் கோரிக்கை மனு பெட்டியைப் பயன்படுத்திக் கொள்வது விரைவான தீர்வுக்கு வழி வகுக்கும்.
tnhbptn@gmail.com என்ற மின்னஞ்சலிலும் ஜூன் 3 முதல் 30 வரை மனு செய்யலாம்.
அனைத்து மனுக்களையும் சிறப்புக் குழுவிடம் வீட்டு வசதி வாரியம் ஒப்படைக்கும். ஆகஸ்ட் 30க்குள் சிறப்புக்குழு ஆய்வு செய்து வாரியத்திடம் அனுப்பி வைக்கும். சிறப்புக்குழுவின் பரிந்துரைகளை வாரியம் பரிசீலித்து காலதாமதமின்றி ஆணைகள் வெளியிடப்படும். அதற்கேற்ப அதிகாரிகள் உள்பட அனைவரும் இப்பணியை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ளார். நெடுங்காலப் பிரச்சினைக்குத் தீர்வு காண வீட்டு வசதி வாரியம் ரெடியாகிவிட்டதை வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகனின் விரைவான செயல்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.