திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் மாவட்ட அளவில் உள்ள பல துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்பு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அரசு தலைமை மருத்துவமனையில் தனி கட்டிடம் தயாராக உள்ளது. கரோனா வைரஸ் என்பது வெளிநாட்டில் இருந்து வந்தது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் இடையே சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. ஒலிபெருக்கி மூலம் கரோனா விழிப்புணர்வு செய்யபட்டு வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட 2500 பேருக்கு மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. கரோனா குறித்து துண்டு பிரச்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்களுக்கு கையுறை பாதுகாப்பு கவசம் கொடுக்கப் பட்டுள்ளது. விலை வாசியைக் கட்டுபடுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தந்த 2270 பேரில் 884 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். விவசாய பொருட்கள் வாங்க முன் அனுமதி பெற்று பொருட்களை வாங்கி செல்லலாம். வீட்டில் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று கூறினார்.