நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான தற்போதைய ஆறுதலான விஷயம், கடந்த ஆறு நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமடையவில்லை என்பதுதான்.
கடந்த மாதம் 22ம் தேதி ஆரம்ப கட்டத்தில், முதல் முதலாக கரோனா தொற்றுடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, கரோனா பாஸிட்டிவ் என கண்டறியப்பட்டவர் ராதாபுரத்தைச் சேர்ந்த 43 வயதானவர். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டதில் அவரது உடல் நலம் தேறிவருவதாக நெல்லை ஆட்சியர் வட்டாரத்தின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 6 நாட்களுக்கு முன்புவரை நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 38 பேர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் அடங்குவர். ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்குட்பட்ட 11 பேர்களில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஏழு பேரும், நெல்லை நெல்லை அரசு மருத்துவனையில் நான்கு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் நெல்லையிலுள்ள செய்துங்க நல்லூர் பகுதியை சேர்ந்தவர், மற்ற மூவர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுவரை இந்த மாவட்டங்களில் புதிதாக கரோனா தொற்றுக் கண்டறியப்படவில்லை.
இதனடிப்படையில் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கை 42. புதிய வரவுகள் எதுவும் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.