Skip to main content

கொரோனா எச்சரிக்கை -  முன்னுதாரனமாக விளங்கும் மறமடக்கி இளைஞர்கள்

Published on 28/03/2020 | Edited on 28/03/2020
m

 

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவிடமிருந்து தபபிக்க ஒரே வழி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வதே. இந்த முறையை சரியாக கையாண்ட கியூபா உள்ளிட்ட பல நாடுகளும் இறப்பு விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில் தனிமையைச் சுதந்திரமாக நினைத்து சுற்றிய இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. 


இதை உணர்ந்த இந்தியாவும் 21 நாட்கள் தனிமையில் இருங்கள் என்று ஊரடங்கை அறிவித்தது. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களைத் தொடக்கத்தில் கவனக்குறைவாக வெளியே விட்டுவிட்டு வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதும் அவர்களை அடையாளம் கண்டு கைகளில் முத்திரை குத்தி வீட்டுக்கும் அடையாளமிட்டு தனிமையில் இருங்கள் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பிறகு வீட்டில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பலர் இதை கேட்டாலும் சிலர் இதுபற்றி கவலைப்படாமல் சுற்றத் தொடங்கியதால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் தான் நாட்டுக்கே முன்னுதாரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம இளைஞர்கள் திகழ்கிறார்கள்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ளது மறமடக்கி கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளில் வெளியூர்களில் வேலைக்காகச் சென்றுள்ளனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக பலர் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். ஊருக்குத் திரும்பிய இளைஞர்கள் நேரடியாக தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் அந்த கிராமத்தின் காவல் தெய்வமான பொழிஞ்சியம்மன் கோயில் வளாகத்திலேயே தங்கி உள்ளனர். 


அதாவது பல நாடுகளில் இருந்தும் சொந்த ஊருக்கு வந்தோம். வரும் வரை எங்களுக்கு நோய் தொற்று இல்லை என்பதைப் பரிசோதனைகள் மூலம் அறிந்து கொண்டோம். ஆனாலும் அரசு குறிப்பிட்டுள்ள நாட்கள் வரை நாங்கள் தனிமையில் இருக்க விரும்பி பொழிஞ்சியம்மன் கோயில் வளாகத்தில் போதிய இடைவெளியில் தங்கி இருக்கிறோம். குறிப்பிட்ட நாட்கள் வரை எங்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு வீடுகளுக்குப் போவோம். இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் வெளிநாடு, வெளியூரில் இருந்து வந்தவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பிறகு வீட்டுக்குச் சென்றால் நம் குடும்பம், கிராமம் மக்கள் பாதிக்காமல் பாதுகாக்க முடியும் என்றனர்.


நாட்டுக்கே முன்னுதாராணமாக விளங்கும் மறமடக்கி இளைஞர்களை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்