சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனோ வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸால் சீனாவை சேர்ந்த 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 362 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. அதனால் சீனாவுக்கு சென்ற பல வெளிநாட்டவர்களும் அவரவர் தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அதுபோல் வேலை, உயர்கல்வி போன்றவற்றிற்காக சீனாவுக்குச் சென்ற இந்தியர்களும் தாய்நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அந்தந்த விமான நிலையங்களிலேயே உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேலை நிமித்தமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மூன்று சீன நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்த அவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்ததில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதையடுத்து அங்கு அவருக்கு தனி வார்டில் தனி படுக்கை அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த நபரிடம் இருந்து ரத்த மாதிரியை சேகரித்து சீனாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வு முடிவு வந்த பிறகு அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அந்த வாலிபரின் குடும்பத்தில் உள்ள மூவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.