தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் மதுரை மாவட்டத்தில் இன்று (08.06.2021) கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழுமையாக தடுப்பூசி வந்த பின்னர்தான் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி 16ஆம் முதல் மதுரையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 3,73,491 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அதில் 18 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோர் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் ஆவர். மதுரையில் தொடர்ந்து 100 முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவந்த நிலையில், தற்போது கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருவதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளானது குறைக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் பிரதான தடுப்பூசி மையத்தில் நாள்தோறும் 1,400 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கடந்த வாரம் வெறும் 200 பேருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று கையிருப்பில் இருந்த 1,430 தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டதன் காரணமாக இன்று சுத்தமாக தடுப்பூசி இல்லாததால், மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படாது என திட்டவட்டமாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இன்று காலைதான் வெளியிடப்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.