தமிழக சுகாதாரத்துறை செயலாளர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,075 ஆக இருந்த எண்ணிக்கை, தற்போது 1,173 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் இருந்து 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33 ஆயிரத்து 850 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 136 பேர் அரசு முகாமிலும் உள்ளனர். 63 ஆயிரத்து 380 பேருக்கு, 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தது என்றார்.
மேலும் பேசுகையில், இன்று ஒரே நாளில் 2,096 பேரின் கரோனா பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன, அந்த முடிவுகளில் 98 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 12,746 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றார்.
இன்று கோவையில் மேலும் ஏழு பேருக்கு கரோனா உறுதியானதால், இந்த எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 10 வயதுக்கு குறைவான 31 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 9 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூரில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 18 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணிக்கையானது 78 ஆக உள்ளது. கோவையில் மொத்தம் 126 பேருக்கும், ஈரோட்டில் 64 பேருக்கும், திண்டுக்கல்லில் 56 பேருக்கும், நெல்லையில் 56 பேருக்கும் கரோனா பாதிப்பு உள்ளது. ஈரோட்டில் இன்று யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.