சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் மருத்துவருக்கு திடீரென்று தொண்டை வலி, காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் உடனடியாக தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் 20- க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளின்பேரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப்படிப்பு படித்து வரும் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அன்று திடீரென்று தொண்டையில் லேசான வலி ஏற்பட்டுள்ளது. அத்துடன் காய்ச்சலும் இருந்தது. இதையடுத்து அவர், அரசு அலுவலர்களுக்கு ஒதுக்கப்படும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும் முழு பரிசோதனை நடந்து வருகிறது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''பயிற்சி மருத்துவருக்கு தொண்டை வலியும், காய்ச்சலும் ஏற்பட்டதால் உடனடியாக அவரைத் தனிமை வார்டில் அனுமதித்து கண்காணித்து வருகிறோம். அவருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனையின் முடிவுகள் வந்த பிறகுதான் அவருடைய உடல்நல பாதிப்புக்கான காரணம் தெரிய வரும்,'' என்றனர்.