இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
தமிழகத்திலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழக தலைநகர் சென்னை மட்டுமில்லாது, தமிழகத்தில் அதிகம் கரோனா பரவல் இருக்கும் பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் கரோனா பரிசோதனைகள் ஆகியவற்றை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிற நிலையில், மதுரையில் கரோனா பாதிப்பு அதிகரித்ததால் முதற்கட்டமாக 18 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா இருந்தால் அந்த தெரு தகரம் கொண்டு அடைக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 592 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.