உலகம் முழுவது பரவி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவியுள்ளது. அதேபோல தற்போது வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதில் சில நாட்களுக்கு முன்பு மும்பையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிக்கு இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள், குழந்தைகளுடன் வந்தனர். ஒரு பேருந்தில் வந்த 21 பேரை கறம்பக்குடி அரசு பள்ளியிலும், மற்றொரு பேருந்தில் வந்த 17 பேரையும் காட்டாத்தி அரசுப் பள்ளியிலும் தங்கவைத்து அவர்களுக்கு பரிசோதனைகள் செய்ய மாதிரிகள் எடுக்கப்பட்டு உடனடியாக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு புதன் கிழமை மதியம் சோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில் ஒரு வயது குழந்தை உள்படி 9 பேருக்கு கரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்களில் 8 பேரை புதுக்கோட்டை அரசு சிறப்பு கரோனா மருத்துவமனைக்கும், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை தஞ்சாவூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மற்றவர்கள் பள்ளிகளிலேயே தங்க வைக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் காரோனா இல்லாத மாவட்டமாக பல நாட்களாக இருந்து பிறகு படிப்படியாக 7 பேருக்கு தொற்று ஏற்பட்டு ஒருவர் தவிர மற்ற 6 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் தற்போது மும்பை தொழிலாளர்களால் மீண்டும் கொரோனா மாவட்டமாக நீடிக்கிறது.