Skip to main content

கரோனா தடுப்பு பணி.. திருச்சியில் அமைச்சர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை..! 

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

Corona prevention work .. Officials consult with ministers in Trichy ..!

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (14.05.2021) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அம்மாவட்டத்தின் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்று, அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்கள்.

 

இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கரோனாவின் பாதிப்பு எப்படி உள்ளது என்றும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் அனைவரும் அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தனர்.

 

சுமார் ஒருமணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “சென்னையில் எப்படி ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளதோ அதேபோல திருச்சியிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு வார் ரூம் அமைக்கப்பட உள்ளது. அதில் டி.ஆர்.ஓ. மற்றும் அவருக்கு கீழ் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் அவர்களைத் தொடர்புகொண்டு எந்த உதவிகளையும் பெறலாம்.

 

ரெம்டெசிவர் மருந்தானது, மத்திய அரசிடமிருந்து பெறுவது மிகக் குறைவாக இருப்பதால் அதை அதிகப்படுத்திப் பெற மத்திய அமைச்சரிடம் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஒருநாளைக்கு 300 பேருக்கு கொடுக்கப்படும் இடத்தில், 500க்கும் அதிகமானோர் கூட்டமாக சேர்ந்து வரிசையில் நின்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி நாங்கள் முதலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளோம். தொகுதிகளுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.

 

தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “பல பெற்றோர்களிடம் இருந்து நானும் பல புகார்களைப் பெற்றுவருகிறேன். குறிப்பாக ஓடாத பேருந்துக்கு கட்டணம் வசூலிப்பதாகவும் பள்ளிக்கு வராத நிலையில் பள்ளி சீருடைக்கான கட்டணம் வசூலிப்பதும் என்று தொடர்ந்து வசூல்செய்து வருவதாக எனக்கு வந்த புகாரின் அடிப்படையில் விரைவில் அதுகுறித்து தனியார் பள்ளிகளோடு ஆலோசனை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்