கரோனா மூன்றாவது அலையிலிருந்து கோவையைப் பாதுகாக்கப் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (10/08/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா 3- வது அலையில் இருந்து கோவையைப் பாதுகாக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கரோனா 2- வது அலையின் போது கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற கொங்கு மண்டலப் பகுதிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். இப்போது கரோனா 3- வது அலையின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இவை மக்களிடம் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளன.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், சி.டி.ஸ்கேன் போன்ற பரிசோதனை வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், தற்காலிக மருத்துவமனைகள் அமைத்தல், ஆக்சிஜன் உற்பத்தி ஆகியவற்றில் இப்போதே கவனம் செலுத்த வேண்டுகிறேன். தேவையான அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் குழந்தைகள் அனுமதிக்கப்பட வேண்டிய பட்சத்தில், பெற்றோர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தாலுகா மருத்துவமனைகள், கிராமப்புற, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியை ஏற்பாடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.
கரோனாவுடன் டெங்கு, டைபாய்டு போன்ற காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க கழிவுகள் அகற்றுதல், சாக்கடை நீர் தேங்காமல் தடுத்தல், சுத்தமான குடிநீர், திறந்த வெளிகளில் மலம் கழித்தலைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளிலும் தமிழக அரசு இறங்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். முகக்கவசங்கள், கிருமி நாசினிகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும். 3- வது அலையில் இருந்து கோவையைப் பாதுகாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.