தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை அடைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு பணிகளையும் நோய்த்தடுப்பு பணிகளையும் தொடர்ந்து அரசு சார்பிலும் மருத்துவத் துறை சார்பிலும் செய்துவரப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் அனைத்து வசதிகளோடு கூடிய தனியார் மருத்துவமனைகளும் கரோனாவிற்கும் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 20 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனை திருச்சி உறையூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகள் பெரும்பாலும் கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கு அதிக அளவில் பணம் வசூலிப்பதாக தொடர்ந்த பல புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வரும் நிலையில் திருச்சியில், அந்த குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனைக்குள் போதிய இடவசதி இல்லாததால் மருத்துவமனைக்கு வெளியே இருக்கக்கூடிய வராண்டாவில் உடனடியாக ஒரு படுக்கையை வைத்து அவருக்கென்று ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரையும் அருகில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வெளியே படுக்க வைக்கப்பட்டு இருக்கக்கூடிய அவரால் இன்னும் அந்த மருத்துவமனைக்கு வரக்கூடியவர்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.