
கரோனா பயத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. சிவகாசி தாலுகா, ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த வயதான தம்பதியர், கரோனா அச்சத்தில் விஷம் அருந்தி உயிரை விட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
முத்துமணி, பட்டாசு ஆலைத் தொழிலாளி ஆவார். இவருடைய அண்ணன் முன்பே காலமாகிவிட்டார். இவருடைய இரண்டு தங்கைகளும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். இவர்களின் அம்மா தெய்வானை (வயது 62) சர்க்கரை நோயினால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். தன் கணவர் பெருமாளிடம் தெய்வானை, ‘இப்படி நோயுடன் வாழ்வதைக் காட்டிலும் செத்துவிடலாம்..’ என்று அடிக்கடி புலம்பிவந்திருக்கிறார். அப்போதெல்லாம் பெருமாள், ‘வயதாகிவிட்டாலே அப்படித்தான் இருக்கும். மருந்து, மாத்திரை சாப்பிடு. எல்லாம் சரியாகிவிடும்’ என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், பெருமாள், தெய்வானை ஆகிய இருவருமே உடல்நலமின்றி சிரமப்பட்டுள்ளனர். ஒருவேளை கரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் வேறு இருவரையும் தொற்றியிருக்கிறது. இனி பிழைக்கமாட்டோம் என்ற எண்ணம் மேலோங்கிவிட, மகன் முத்துமணியிடம் வெளியூரில் இருக்கும் மகள்கள் இருவரையும் கூட்டி வரச்சொல்லியிருக்கின்றனர். மகள்களும் வந்து பெற்றோரைப் பார்த்து, ‘உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. ஆஸ்பத்திரிக்குப் போவோம். எல்லாம் சரியாகிவிடும்.’ என்று நம்பிக்கை ஏற்படுத்த முற்பட்டிருக்கின்றனர். பெற்றோரோ ‘ஆஸ்பத்திரி போனா ரொம்ப செலவாகும். யாருகிட்ட பணம் இருக்கு?’ என்று விரக்தியாகப் பேசியிருக்கின்றனர்.
மகள் சாந்தி வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, பூச்சி மருந்து வாடை மூக்கைத் துளைத்திருக்கிறது. விழுந்தடித்து சென்றபோது, அவரது அம்மாவும் அப்பாவும் ரோக்கர் மருந்தைக் குடித்திருந்தனர். அந்தக் குடும்பத்தினர் தலையிலடித்துக்கொண்டு அழுதபடி, இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி, சிவகாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிலைமை மோசமாகிவிட்டதால், அங்குள்ள மருத்துவர்கள் முதல் சிகிச்சை அளித்துவிட்டு, விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி சிபாரிசு செய்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முதலில் பெருமாள் இறந்துவிட, அதனைத் தொடர்ந்து தெய்வானையின் உயிரும் போய்விட்டது.
வயது பாரபட்சமின்றி பலரது உயிரையும் கரோனா காவு வாங்கும் நிலையில், முதியோர் தற்கொலை செய்து மாண்டுபோகும் கொடுமைகளும் நடக்கின்றன.