இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தையும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 400றையும் கடந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது.
தமிழகத்திலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழி சமூக விலகலை கடைபிடிப்பதும், மாஸ்க் அணிவதும்தான் என்பதால் தமிழக அரசு அதையே மக்களிடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் மக்கள் இதை முறையாக கடைபிடிப்பதில்லை. இதையடுத்து சமூக விலகலை ஏற்படுத்தும் விதமாக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இயங்கும் நேரத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூரில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் ரூ.100 அபராதம் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.