இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றன. அதேவேளையில், உருமாறிய கரோனா தொற்றால் 34 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள முகக் கவசம், தனிமனித இடைவெளி ஆகிவற்றைப் பின்பற்ற அரசு தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது. அதேவேளையில், கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி மிக முக்கியமானதாக உள்ளது. இந்தச் சூழலில் கரோனாவின் கோரத் தாண்டவத்தைத் தடுத்து நிறுத்த கோவையில் கரோனா தேவி என்ற அம்மன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இருகூரில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தின் 51வது சக்தி பீடத்தில் கரோனா தேவிக்கான கருங்கல்லால் ஆன சிலையை வடிவமைத்துள்ளனர். ‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்’ என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி, கரோனாவைப் புனிதமாக கருதி வழிபாடு நடத்த வேண்டும் என்று ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
கரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்த கரோனா தேவி சிலையை வடித்துள்ளதாகவும், தொடர்ந்து 48 நாட்கள் மகா யாக பூஜை நடைபெறும்போது கரோனா தொற்று அழிந்துவிடும் என்கிறார் கோவில் அறங்காவலர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மகா யாகத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத்தால், கோவிலுக்கு வெளியே நின்று கரோனா தேவியைப் பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.