
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அதன் முழு முதல் கவனமும் கரோனா கட்டுப்பாட்டு நடவடக்கைகளிலேயே உள்ளது. அதன்படி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் பங்குபெற்ற அனைத்து அமைச்சர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து அதற்கான பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
திமுக அமைச்சரவையில் சீனியர்களில் ஒருவர் ஈரோடு சு. முத்துச்சாமி. இவரின் அயராத உழைப்பு தற்போது சாதனையாக மாறியுள்ளது.
கரோனா நோய் தொற்று துவங்கியதிலிருந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டுவந்தது. கரோனா முதல் அலையின்போது அதிகபட்சம் 500 படுக்கை வசதிகள்தான் இங்கு இருந்தது. தொற்றின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடியது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் என பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறவந்தனர்.
அப்போதுதான் மாவட்ட அமைச்சர் சு. முத்துச்சாமி தனது செயல்பாட்டின் மூலம் தற்காலிகமாக 500 படுக்கைகள் அமைத்தார். அது மட்டும் போதாது, நிரந்தரமான புதிய மருத்துவமனை வேண்டும் என்பதை திட்டமிட்ட அவர், ஈரோடு மாவட்டத்திலுள்ள ரோட்டரி கிளப், பல்வேறு தொழில் நிறுவனங்கள், ஒளிரும் ஈரோடு தன்னார்வ அமைப்பினர் ஆகிய அணைவரையும் அழைத்து தனது திட்டம் குறித்து பேசினார். எல்லோரும் உதவ முன்வந்தனர். பல நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 நாட்களில் 70 ஆயிரம் சதுரடியில் ஒரு பிரம்மாண்டமான கரோனா மருத்துவமனை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை கட்டட பணியை அமைச்சர் முத்துச்சாமி, ஒவ்வொரு நாளும் அதிக கவனத்துடன் மேற்பார்வை செய்தார். ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இது அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 45 நாட்களில் 70 ஆயிரம் சதுரடியில் 400 படுக்கைகள் கொண்ட நிரந்தர மருத்துவமனை ஒன்று உருவாக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பதால் ஆசிய அளவில் ‘ஆசியன் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இவை வெளியாக உள்ளது.
அதேபோல் லிம்கா ரெக்கார்டு புத்தகத்தினர் இந்த மருத்துவமனையைப் பார்வையிட்டு சாதனைச் சான்று கொடுக்கவுள்ளனர். கரோனா நோய்த்தொற்று முடிவுக்குவந்த காலத்திற்குப் பிறகு இந்த மருத்துவமனையில் அனைத்து வகையான நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் இந்த மருத்துவமனையை ரோட்டரி அமைப்பினர் பராமரித்து, தனியார் மருத்துவமனை போல தூய்மையாக வைத்திருப்பார்கள் என கூறியுள்ளனர்.
பத்து வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு செய்யாததை பத்து வாரத்திற்குள் செய்து மக்களுக்கு மருத்துவ உதவியை நேரடியாக வழங்கியுள்ள சீனியர் அமைச்சர் முத்துச்சாமி தமிழ்நாடு முதல்வரால் பாராட்டு பெற்றுள்ளார்.