கரோனாவைத் தடுக்க நாடு முமுவதும் ஊரடங்கு பிறப்பித்திருக்கும் நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்வதாக கூறி மக்கள் இருசக்கர வாகனங்களில் உறவினா்கள் மற்றும் நண்பா்கள் வீடுகளுக்குச் சுற்றித் திரிகிறார்கள்.இதைப் பாதுகாப்புக்கு நிற்கும் போலீசார் கண்டித்தும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் டூவிலரில் ரவுண்ட் அடிக்கிறார்கள்.
இதை நூதன முறையில் கட்டுப்படுத்த குமரி மாவட்டம் தக்கலை சரக டிஎஸ்பி ராமசந்திரன் மார்த்தாண்டத்தில் டூவிலரில் அதுவும் அத்தியாவசிய காரணமின்றி செல்பவா்களைப் பிடித்து உட்கார வைத்து கரோனா சம்மந்தமான கேள்வி தாள்களைக் கொடுத்து தோ்வு எழுதுவது போல் எழுத வைத்தார். அந்தக் கேள்வி தாளில் கரோனாவின் காதலி யார்? கரோனா வைரஸ் முதலில் உருவான நாடு எது? அதை தடுக்க நாம் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா முதலில் உடலில் உள்ள எந்த உறுப்பை தாக்கும் என 10 கேள்விகள் உள்ளன.
ஒவ்வொரு கேள்விக்கும் 50 செக்கன்ட் என்ற நிலையில் தவறான விடையளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 5 தோப்புகரணங்கள் போட வைத்ததோடு, கரோனாவை ஒழிப்பது சம்மந்தமான உறுதிமொழி மற்றும் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிப்பது சம்மந்தமான உறுதி மொழியையும் எடுக்க வைத்த பின்பு டிஎஸ்பி ராமசந்திரன் அன்போடு எச்சரித்து அவா்களை அனுப்பினார்.
இப்படி மார்த்தாண்டத்தில் மட்டும் 100 பேரை தோ்வு எழுத வைத்து நூதன முறையில் தண்டனையும் கொடுத்த டிஎஸ்பியின் நடவடிக்கையைப் பலா் பாராட்டுகின்றனா்.