Skip to main content

குன்னூர் பேருந்து விபத்து; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Coonoor bus incident Obituary of Chief Minister MK Stalin

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று இன்று (30-9-2023) மாலை சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காக 54 சுற்றுலாப் பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குறுகிய வளைவில் பேருந்து திரும்பிய போது, நிலைதடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும் பேருந்தில் பயணித்த அனைவரும் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த நித்தின், பேபி கலா, முருகேசன் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இந்த விபத்து குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (வயது 64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29) மற்றும் சிறுவன் நிதின் (வயது 15) உள்ளிட்ட எட்டு பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரனை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டுத் துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

 

Coonoor bus incident Obituary of Chief Minister MK Stalin

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்