Skip to main content

சர்ச்சைக்குரிய பழனி முருகன் சிலை குடந்தை கோர்ட்டுக்கு வந்தது!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

சர்ச்சைக்குரிய பழனி முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பிறகு நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது.

  
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி சிலை சேதம் அடைந்ததை தொடர்ந்து அதற்கு பதிலாக சுமார் 220 கிலோ எடையில் முருகன் சிலையை கடந்த 2004 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் தலைமை ஸ்தபதி முத்தையாவால் செய்யப்பட்டது. இந்த சிலை பிரதிஷ்டை செய்த ஆறு மாதத்திலேயே நிறம் மாறி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக பக்தர்களிடையே புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பான புகாரினை சிலை கடத்தல்தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். 
 

மூலவர்சிலை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டு, சிலை கடத்தல் தடுப்புபிரிவு காவல்துறை தலைவர் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் முத்தையாஸ்தபதி, அப்போதைய பழனி முருகன் கோவில் இணை ஆணையர் கே.கே.ராஜா, நகை மதிப்பீட்டாளர் புகழேந்தி மற்றும் தேவேந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரனை நடத்தியது.
 

இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் காவல் துறைக்கு டிமிக்கிக்கொடுத்துக்கொண்டு முன்ஜாமின் பெற முயன்றுவந்து பலனின்றி குடந்தை நீதிமன்றத்தில் ஆஜரானார். தனபாலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு கும்பகோணத்தில் போலீசாரின் கண்பார்வையிலேயே இருந்துவருகிறார். இந்த நிலையில் நேற்று சர்ச்சைக்குரிய பழனிமுருகன் சிலையை கைப்பற்றி  வழக்கை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் கொண்டு வந்தனர்.
 

முருகன்சிலை குறித்து விசாரித்த நீதிபதி ஐயப்பன்பிள்ளை, முருகன் சிலையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்திரவிட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்போடு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்