
ஒப்பந்ததாரருக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக ஒன்றிய தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டியில் உள்ள ஆற்றைக் கடந்து செல்ல பாலம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்ட நிதியில் 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் கட்டும் ஒப்பந்தப் பணியை அய்யம்பாளையத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆத்தூர் பாஜக ஒன்றிய தலைவர் அய்யனவேல் என்பவர் பாலம் கட்டும் பணியை தடுத்து ஒப்பந்ததாரருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரர் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.