கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவன சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பாரதப் பிரதமர் அறிவித்த, ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தரப்படுத்தும் வரை அனைவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் வழங்க வேண்டும். என்.எல்.சி நிறுவனத்திற்கு ஏற்கனவே வீடு, நிலம் கொடுத்து ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வேலைக்கு தகுந்தார் போல் பணி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 01.06.2023 அன்று என்.எல்.சி நிர்வாகத்திற்கு வேலை நிறுத்த அறிவிக்கை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நேற்று புதுச்சேரி மத்திய தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு செயலாளர் சேகர், தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச் செயலாளர் செல்வமணி மற்றும் என்.எல்.சி நிர்வாகம் சார்பில் துணை மேலாளர்கள் திருக்குமரன், மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க என்.எல்.சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் சொசைட்டி மேலாண் இயக்குநருக்கு தொழிலாளர் நல உதவி ஆணையர் உரிய முறையில் அழைப்பாணை வழங்கவில்லை. இதனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதன் காரணமாக பேச்சுவார்த்தையை தொடராமல் தொழிற்சங்கத்தினர் புறக்கணித்து வெளியேறினர்.
இது குறித்து என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறுகையில், “என்.எல்.சியில் பணியாற்றக்கூடிய 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது அதுவரை குறைந்தபட்ச ஊதியமாக 50,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய தொழிலாளர் துறையின் உதவி ஆணையாளர் எங்களுக்கும், நிர்வாகத்திற்கும் அழைப்பு கொடுத்திருந்தார். ஆனால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சொசைட்டி மேலாண் இயக்குநருக்கு முறையாக அழைப்பு விடுக்காதால் அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
இதனால் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறி இருக்கிறோம். வேலை நிறுத்தம் அறிவித்துள்ள இந்த சூழலில் கூட இங்கு தமிழ் தெரியாத உதவி ஆணையாளரை வைத்து பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது. எனவே தமிழ் தெரிந்த அதிகாரியை வைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். என்.எல்.சியால் நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்கள் எல்லாம் மீறப்பட்டுள்ளது. நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர் துறை அதனையும் பேச்சுவார்த்தை மூலம் மழுப்பி இழுத்தடிக்க பார்க்கிறது. வருகிற 15 ஆம் தேதி என்.எல்.சியில் வேலை நிறுத்த அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். அன்று தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வேலை நிறுத்த போராட்ட தேதியை அறிவிப்போம்” என்றார்.