கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், மூன்று திறந்தவெளி சுரங்கத்தின் மூலமாக நிலக்கரி வெட்டப்பட்டு, அனல்மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
என்.எல்.சி. நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் முதல் அந்நிறுவனத்தில் பணிபுரியும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு, பஞ்சப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் என்.எல்.சி. நிர்வாகம் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்கள் என அனைவருக்கும் பஞ்சப்படி, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக என்.எல்.சி. நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதன் அடிப்படையில், பேச்சுவார்த்தைக்கு பின்பு என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, பஞ்சப்படி உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. மேலும் பேச்சுவார்த்தையின்படி ஆண்டுக்கு 750 தொழிலாளர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டதால், 2021-ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த மற்றும் சொசைட்டி (society) தொழிலாளர்களில், சீனியாரிட்டி அடிப்படையில், 750 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கான அட்டவணையை என்.எல்.சி. நிர்வாகம் வெளியிட்டது.
பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் உடல் தகுதி பரிசோதனைக்குப் பின்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறும் தொழிற்சங்க நிர்வாகிகள், "25 ஆண்டு கால தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றியாக என்.எல்.சி. இந்தியா நிறுவனம் பணி நிரந்தரம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.