தேனி மாவட்டம் கம்பத்தில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை மிரள வைத்த போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சின்னகானல் பகுதியில் 10 பேருக்கும் மேற்பட்டோரை தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் எனும் யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. முதற்கட்டமாக மயக்க ஊசி செலுத்தி யானையைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஏற்கனவே இந்த அரிக்கொம்பன் யானை கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஆறு டோஸ் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு தேக்கடி புலிகள் காப்பகத்தில் விடப்பட்டிருந்தது. அங்கிருந்து மேகமலை சென்ற யானை மீண்டும் குமுளியில் இறங்கி தற்போது கம்பம் பகுதிக்கு படையெடுத்து வந்துள்ளது.
சாலையில் அச்சுறுத்தும் விதமாக நடந்து வந்த யானை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை துரத்தும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்காக பொள்ளாச்சியிலிருந்து இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.
அதே நேரம் ட்ரோன் மூலம் கண்காணிக்க சின்னமனூரைச் சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர் ஹரி என்பவர் அழைத்து வரப்பட்டிருந்தார். வனத்துறை அதிகாரிகள் மயக்க மருந்து செலுத்த முயன்ற நிலையில் ஸ்டூடியோ உரிமையாளர் ஹரி ட்ரோனை தவறாக இயக்கியதால் யானை மிரண்டு ஓடியது. இந்நிலையில் யானை மிரளும் வகையில் செயல்பட்ட ஹரியை போலீசார் கைது செய்துள்ளனர்.