விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள எண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள்(90). இவருக்கு அவரது ஊரின் அருகே உள்ள அய்யனாரப்பன் கோயில் அருகில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தின் அவரது மகன் விவசாயம் செய்து வருகிறார். பகல் நேரங்களில் பயிர்களை கால்நடைகளிடமிருந்து கண்காணிக்க அங்கேயே ஒரு குடிசை அமைத்து அதில் கன்னியம்மாளை காவலுக்கு வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மர்ம மனிதர்கள் சிலர் சம்பவத்தன்று கன்னியம்மாள் தங்கியிருந்த குடிசை பகுதிக்கு சென்று வழிப்போக்கர்கள் என்று கூறி குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுள்ளனர். இப்படி மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவர் தனித்து இருப்பதை கவனித்த அவர்கள் திடீரென்று மூதாட்டியின் இரு காதுகளிலும் அணிந்திருந்த 6 கிராம் தங்க தோடுகளை காதோடு அறுத்து கொண்டு சென்றுள்ளனர். காதறுந்த வலி தாள முடியாமல் மூதாட்டி கத்தியுள்ளார். அந்த நிலத்தைச் சுற்றி வீடுகள் இல்லாததால் வெகு நேரம் ரத்தம் வெளியேறு வலியில் அந்த மூதாட்டி துடித்துள்ளார்.
அந்த வலியிலேயே மூதாட்டி வீட்டுக்கு வந்து மகனிடம் நடந்த சம்பவம் குறித்து விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். மூதாட்டியின் அறுபட்ட இரு காதுகளிலும் தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியிடம் விசாரணை செய்தனர். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதாட்டியின் காதில் இருந்த கம்மலுக்காக காதோடு அறுத்துச்சென்ற அந்த மர்மக் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.