சேலத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்; கோவை, மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தை விட பாதி மடங்கு தான் எங்களுக்கு கொடுக்கப்படுகிறது. எனவே அவர்கள் அளவிற்கு எங்களுக்கும் தினக்கூலி வழங்க வேண்டும்; பணப்பலன்களான தொழிலாளர் வைப்புநிதி முறையாக வழங்க வேண்டும். அதில் முறைகேடுகள் நடைபெறுகிறது; எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; விடுமுறை நாட்களில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் திருமணிமுத்தாற்றில் இறங்கி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே காத்திருப்பு போராட்டம், மனு கொடுக்கும் போராட்டம் என பலமுறை நடத்தியும் பலன் கிடைக்காததால் இன்று அரசினுடைய கவனத்தை ஈர்க்கும் விதமாக சேலம் திருமணிமுத்தாற்றில் இறங்கி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.