இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டுவாழ் மடம்,பாறைகா மடம், கோட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு குழு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய ஏதுவாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். அரக்கோணத்தில் இருந்து தலா 25 பேர் கொண்ட நான்கு குழுக்களைச் சேர்ந்த நூறு வீரர்கள் தற்பொழுது புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி கரும்பாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.