கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நேற்று சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அதே சமயம் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், தண்டவாளம் சேதம் காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதியடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ரயிலில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரயில்வே தரப்பில் இருந்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.