வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (08.01.2024) காலை 8.30 மணி வரையில் தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் சராசரியாக 2.15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 13.18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதேசமயம் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று 08.01.2024) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (08.01.2024) கனமழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் நாளை (09.01.2024) கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் நாளை மறுநாள் (10.01.2024) கனமழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (08.01.2024) தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை அடுத்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். நாளை (09.01.2024)முதல் 11.01.2023 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே. பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.அ. ராமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.