வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதன் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. காந்திபுரம் பகுதியில் ராட்சத பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளது. மேலும் 4க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு தமிழக போக்குவரத்துக் கழக அரசுப் பேருந்து ஒன்று துஞ்சப்பனை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு மண் சரிவு ஏற்பட்டதால் சாலைகள் சேரும், சகதியுமாக இருந்துள்ளது. இதில் பேருந்து சிக்கிக் கொண்டது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் மண் சரிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அதே சமயம் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் பர்லியார் என்ற இடத்தில் பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு மரம் விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சொகுசு பேருந்து மீது மரம் விழுந்ததில் பேருந்து சேதமடைந்தது.