வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று (26/11/2021) 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கனமழை காரணமாக நேற்று தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.17 மணி நிலவரப்படி தமிழகத்தில் தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குறிஞ்சி நகரில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் தொடர் மழை காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ராஜாபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து திரும்பிவிடப்பட்டுள்ளது. அதேபோல் வளசரவாக்கம் மெகா மார்ட் உள்ள சாலையில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து திரும்பி விடப்பட்டுள்ளது. வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை நீர் தேங்கியுள்ளதால் ஹபிபுல்லா சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.