கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நைனார்பாளையம் சாலையில் உள்ளது ஒரு டாஸ்மாக் கடை. இங்கு நேற்று முன்தினம் இரவு எட்டு முப்பது மணி அளவில் விற்பனையை முடித்துக்கொண்டு 2 லட்சத்து 37 ஆயிரம் பணத்துடன் விற்பனையாளர் சுப்பிரமணியன் கடையை விட்டு வெளியே வந்தார். அப்போது திடீரென்று பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுப்பிரமணியன் முகத்தின் மீது மிளகாய் பொடி தூவி அவரை அரிவாளால் தாக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பணத்தைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றுள்ளனர். இதில் சுப்பிரமணியன் சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சின்ன சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக் கொள்ளை நடந்த டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று பார்வையிட்டு, டாஸ்மாக் ஊழியர்களிடம் விசாரணையும் நடத்தினார். சமீபகாலமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் பணத்தை குறிவைத்து ஒரு கும்பல் விற்பனையாளர்களை தாக்கி கொள்ளை அடித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஆசனூர் டாஸ்மார்க் கடையில் இதேபோன்று வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் ஊழியரை தாக்கி விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
டாஸ்மாக் ஊழியர்களை குறிவைத்து தாக்கும் கொள்ளையர்களை காவல்துறை எப்போது பிடிக்கும். டாஸ்மாக் ஊழியர்கள் அதன்கண்காணிப்பாளர்கள் போன்றவர்கள் தாக்கப்படுவது தொடர் சம்பவங்களாக உள்ளன அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள். காவல்துறை டாஸ்மாக் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கும் அரசு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்புகின்றனர் அதன் ஊழியர்கள்