கரோனா வைரஸ் தாக்கம் ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இந்த மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொடக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வெளியூரைச் சேர்ந்தவர்கள் முறையாகக் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளாமல் ஈரோடு மாவட்டத்திற்குள் வரத்தொடங்கினர்.
அவர்களில் சிலருக்கு வைரஸ் தொற்று இருந்ததால், மேலும் நூற்றுக் கணக்கானோருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் மக்கள் வசிக்கும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது. இதில் ஈரோட்டில் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இராஜாஜிபுரம் என்ற பகுதியும் அடங்கும். அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியில் வேலைக்குச் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கின. அவர்களின் வறுமை நிலையறிந்த ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி சுமார் இரண்டாயிரம் குடும்பத்திற்கு இரு வாரத்திற்குத் தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொடுட்களை நேரில் சென்று வழங்கினார்.
ஏற்கனவே ஈரோட்டில் கரோனா ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு இரண்டாவது முறையாகவும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது.