ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை வேகமாகவே நடக்கிறது. திருவாரூர் மாவட்டம் கோரையாறு ஆளுங்கட்சி பிரமுகர்களால் முற்றிலும் சூறையாடப்பட்டுவிட்டது என்று பலரும் கதறியும் எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை.
இதே திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள மணல் கொள்ளையர்களால் சூறையாடபட்டுள்ள தெற்குப் படுகை கிராமத்தின் ஆற்று படுகைகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இதே போல் சுற்றி உள்ள கிராமங்களான மழவராயநல்லூர், மருதூர், காசாங்குளம், தட்டாங்கோவில் போன்ற கிராமங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர்களில் மணல் அள்ளப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்றும் இந்தக் கூட்டு மணல் கொள்ளையில் அ.தி.மு.க.வுடன் தி.மு.க.வினரும் கைகோர்த்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் விவசாயிகள் மத்தியில் உள்ளது.
விவசாயத்தை அழிக்கும் வகையில் ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளப்படுகிறது. இதனால் இந்தப் பகுதி விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்ற வேதனைக் குரல் விவசாயிகளிடம் எழுந்தாலும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதே போல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வெள்ளாறு, கறம்பக்குடி அக்னி ஆறுகளில் தொடரும் மணல் திருட்டில் ஈடுபடும் லாரிகள் தப்பிச் சென்றாலும் மாட்டு வண்டிகள் மட்டும் சிக்கிக் கொள்கிறது. இந்த நிலையில் தான் கறம்பக்குடி தாலுகா குரும்பிவயல் கிராமத்தில் அக்னி ஆற்றில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபடுவது வடகாடு காவல் ஆய்வாளர் பரத்சீனிவாஷ்க்கு கிடைத்த தகவலின் படி தன்னார்வ இளைஞர்களுடன் சென்றபோது அ.தி.மு.க. பாசறை மா.செ.கருப்பையாவின் மச்சான் கறம்பக்குடி சடையன் தெரு ராஜேந்திரனுக்குச் சொந்தமான டி.என். 48 ஏ.டி. 3226 என்ற டாரஸ் டிப்பர் லாரியில் மணல் ஏற்றிய நிலையில் அங்கிருந்து செல்லத் தயாராக நின்றபோது அந்த லாரியையும் மணல் திருடிய பொக்லினையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.
மேலும் மணல் திருட்டில் ஈடுபட்ட பொக்கலின் டிரைவர் மங்களாகோயில் மணிவண்ணன்(27), லாரி டிரைவர் கறம்பக்குடி புகழேந்தி (38) மற்றும் நெய்வேலி பழனிவேல் (49) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
லாரியின் பக்கங்களில் எஸ்.ஆர். என்று எழுதப்பட்டிருந்தால், எஸ்.ஆர். லாரியையே பிடித்துவிட்டார்களா எனப் பலரும் ஆச்சர்யப்பட்டனர். லாரி பிடிபட்ட நிலையில் பல தரப்பிலிருந்தும் லாரியை வெளியே விட காவல் நிலையத்திற்கு அழைப்புகள் வந்தாலும் வழக்குப் பதிவு செய்து வாகனங்களைப் பறிமுதல் செய்துவிட்டதால் வடகாடு போலிசாரை மக்கள் பாராட்டுகிறார்கள்.