சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கத் தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், உதவி கோட்ட பொறியாளர்கள் சிதம்பரம் ஞானசேகரன், அணைக்கரை குமார், உதவி பொறியாளர்கள் ரமேஷ், வெற்றிவேல், புகழேந்தி, முத்துகுமார், சிவராஜ் உள்ளிட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கீழணை பாசன சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ராதா வாய்க்கால் பாசன சங்கம், கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கம், நாரைக்கால் வாய்க்கால் பாசன சங்கம், வடரெட்டை பாசன சங்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பாசன வாய்க்கால் சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தற்போது சம்பா நடவு பணிக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கீழணையை கட்டிய கீழணையில் ஆதார் காட்டன் மற்றும் வீராணம் ஏரியில் வீராணம் ஏரியை வெட்டிய ராஜதித்தன் ஆகியோருக்கு சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாய சங்க தலைவர்கள் மனு அளித்தனர். மேலும் பல இடங்களில் வாய்க்கால் தூர் வாராமல் உள்ளது என்றும் அதனை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயச் சங்கத் தலைவர்கள் கோரிக்கை வைத்து பேசினர். இதற்கு பதில் அளித்த செயற்பொறியாளர் காந்தரூபன் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் அணைக்கரையில் ஆதார் காட்டன் சிலையும் வீராணத்தில் ராஜதித்தன் சிலையும் வைக்க அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறினர்.
இதனை தொடர்ந்து தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தேதி கிடைத்தவுடன் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து 12ஆம் தேதிக்குள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இதனை அனைத்து விவசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் ரவீந்திரன், ராமச்சந்திரன், இளங்கீரன், விநாயகமூர்த்தி, ரங்கநாயகி, கண்ணன், தம்புராமச்சந்திரன், சத்தியநாரயணன், கற்பனைச்செல்வம் உள்ளிட்ட அனைத்து பாசன வாய்க்கால்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.