விழுப்புரத்தில் கடந்த 21ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்புக்கான தனித்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மையத்தில் மேற்படி தேர்வு நடந்து வருகிறது.
நேற்று கணிதப் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. அப்போது இந்த மையத்தில் உள்ள அறை எண் 7 -இல், காலை 10:50 மணிக்குத் தேர்வு கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் மணிபாலன், தேர்வு எழுதுபவர்களைச் சோதனை செய்தார். அங்கு தேர்வு எழுதிய புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 32) என்பவர் தமிழ் வழியில் விண்ணப்பித்துவிட்டு, ஆங்கிலத்தில் தேர்வு எழிதியதைக் கண்டுபிடித்தார்.
சந்தேகமடைந்த ஆசிரியர் மணிபாலன், அந்த மாணவரை அழைத்து விசாரணை செய்தார். அப்போது, தேர்வு எழுதவேண்டிய கார்த்திக் இவர் இல்லை என்பதும் அவருக்குப் பதிலாக இவர் புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவரது மகன் கிஷோர் (வயது 19) என்பதும் தெரியவந்தது. மேலும், சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வரும் இவர், கார்த்தியின் உறவினர் என்பதால் அவருக்குப் பதில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்வு மையத்தில் முதன்மைக் கண்காணிப்பாளர் செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் டவுன் மேற்கு போலீசார், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய கிஷோரை கைது செய்துள்ளனர். கார்த்திக் பெயரில் தமிழ் ஆங்கிலம் பாடங்களுக்கான தேர்வுகளையும் அவர் எழுதியுள்ளது தெரியவந்தது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.