நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தி வரும் நிலையில்அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணி பாஜக கூட்டணியில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் பாஜகவில் தாமரை சின்னத்தில் தான் ஓபிஎஸ் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை பாஜக வைத்ததாகவும் அதனை ஓபிஎஸ் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். நேற்று இரவு 10:15 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனையானது 12.30 மணி வரை நீடித்தது. ஆலோசனையின் அடிப்படையில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஆர்.தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.
'அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு' என்ற பெயரில் இந்த தகவல் அறிக்கையாக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் நாளை விருப்ப மனு பெறப்படும் எனவும் ஓபிஎஸ் அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.