இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணத்தில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிகாரிகள் சார்பாக நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 12ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்தும், ஆளுநர் உரை குறித்தும், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய கூறுகள் குறித்தும் இந்த காணொளி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த முறை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தது சலசலப்பை ஏற்படுத்த, பாதி உரையில் இருந்தே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.