தமிழக எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலானோர் முதல்வர் எடப்பாடி மீது கோபமாக இருகிறார்கள். இதில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்ற பேதங்கள் இல்லாமல் கோபம் வெளிப்படுகிறது.
அதிமுக அரசு தனது ஆட்சி காலத்தின் கடைசி வருடத்தில் இருக்கிறது. கரோனா நெருக்கடிகளால் கடந்த 4 மாதங்களாக அரசியல் நடவடிக்கைகளில் எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட முடியவில்லை. இந்தச் சூழலில், இந்த வருடத்துக்கான தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த வேண்டிய சூழலில் இருப்பதையும் ஆனால் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படாமல் இருப்பதையும் முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் கொண்டு சென்றும் அதில் அவர் அக்கறைக்காட்டாததுதான் கோபத்திற்கான காரணம் என ஆதங்கப்படுகின்றனர்.
இதுகுறித்து ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேசியபோது, "எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக வருடத்துக்கு 3 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த நிதியைத் தங்களது தொகுதியின் வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்த வேண்டும். அதன்படி, தொகுதியில் எந்தெந்த பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்? எவ்வளவு ஒதுக்க வேண்டும்? என்கிற பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து விடுவார்கள் எம்.எல்.ஏ. க்கள்.
இந்த வருடம் கரோனா விவகாரம் பூதாகரமாகியிருப்பதால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை கரோனா தடுப்புப் பணிகளுக்காக ஒதுக்கினர். மீதம் 2 கோடி ரூபாய் இருக்கிறது. இந்தத் தொகையைத் தங்களின் தொகுதி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் என அரசிடமிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். அதன்பிறகே எந்தப் பணிகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும் என்கிற பட்டியலை கலெக்டரிடம் கொடுக்க முடியும். ஆனால், தொகுதி நிதியைப் பயன்படுத்திக்கொள்ள அரசிடமிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
இது குறித்து முதல்வரிடம் எம்.எல்.ஏ.க்கள் பலரும் நினைவுப்படுத்தியுள்ளனர். ஆனாலும், அரசாணை போடப்படவில்லை. இந்த வருடம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள்தான் இருகின்றன. கரோனா நெருக்கடியான காலக்கட்டம் என்றாலும் இனிவரும் மாதங்கள், தேர்தலை எதிர்கொள்ள தயாராவதற்கான மாதங்கள்தான். அபப்டியிருக்கும் நிலையில், தொகுதி வளர்ச்சிக்கான நிதியை இப்போது பயன்படுத்தினால்தானே எம்.எல்.ஏ.க்கள் செய்த பணிகளைத் தேர்தல் பிரச்சாரங்களில் சொல்ல முடியும். இப்போது நிதி ஒதிக்கினால்தான் பணிகள் தொடங்கி முடிப்பதற்கு தேவையான நாட்கள் இருக்கும். இதனைப் புரிந்துகொள்ளாமல் காலம் தாழ்த்துகிறார் முதல்வர். அரசுக்கு நிதி நெருக்கடிகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காக தொகுதி மேம்பாட்டு நிதிக்குத் தடைபோட்டு விட முடியாது. அதனால் நிதியை ஒதுக்கீடு செய்யும் அரசாணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்!" என்கிறார்கள் நம்மிடம் பேசிய எம்.எல்.ஏ.க்கள்.