கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் லதா. இவரும் அதே பகுதியை சேர்நத சரவணன் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான இரண்டு வாரங்களில் சரவணனுக்கு காவலர் வேலை கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மணப்பாறைக்கு பணிமாறுதல் பெற்றுள்ளார். அப்போது மணப்பாறையை சேர்ந்த அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வரும் சுபாஷினி(45) என்பவருடன் சரவணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய தொடர்பாக மாறியுள்ளது.
இதனையறிந்த லதா, தனது கணவர் சரவணனிடம் சுபாஷினியுடனான தொடர்பை முறித்துகொள்ளும் படி கூறியுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் சரவணன் தினமும் குடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த லதா கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை போலீஸில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் சரவணனும் காவலர் என்பதால் புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், லதா தனக்கு நியாயம் கேட்டு கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இரண்டு குழந்தைகளை வைத்துகொண்டு சிரமப்பட்டு வருகிறேன். எனது கணவர், சுபாஷினியின் தூண்டுதல் பேரில் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துகிறார். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தால், சரவணன் காவலர் என்பதால் அவர்களும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் எந்தப் பலனும் இல்லை. இதனால் காவல் நிலையத்துக்கு ஏறி இறங்கியது தான் மிச்சம். பல்வேறு இடங்களில் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நியாயம் கேட்டு இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்” என்றார். மேலும், தனக்கும், தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கதறி அழுதார்.