கோவையில் வாக்கு எண்ணும் மையங்களில் கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சுமார் 57 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் வாக்கு சதவீதம் மிகக்குறைவாக பதிவானது. மேலும் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது, சில இடங்களில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து 5 வார்டுகளுக்குட்பட்ட 7 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
குறிப்பாக கோவை மாநகராட்சியில் 53.61 சதவீத வாக்குகள் பதிவாகின. பல இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில் நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துவரும் நிலையில், சில இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, " கோவை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது கலவரம், வன்முறையை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் நூறுக்கும் மேற்பட்ட நபர்கள் திடீரென புகுந்து கலவரத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். காவல்துறையினர் இதன் காரணமாக அதிகரிக்கப்பட்டுள்ளார்கள்" என்றார்.