முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவர்களின் விடுதலையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தினர். முன்னாள் ஏடிஜிபி அனுசுயா டெய்சி தலைமையில், மாநில பொதுச் செயலாளர் இராமலிங்க ஜோதி முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ராஜீவ்காந்தியுடன் இறந்தவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.